Thursday, December 27, 2018

வணக்கம்! 2018 ஒரு அலசல்..

வணக்கம்!

2018 ஒரு அலசல்..

ஆண்டின் துவக்கமே பேரிடியாக இருந்தது.. கையில் ஏற்பட்ட சிறு விபத்து சில மாதங்களுக்கு அலைக்கழித்தது. கடும் பணிச்சுமை வேறு.. இரண்டையும் சமாளித்து அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டேன்.. நம்மால் நாலு பேர் எப்போதும் சிரிக்க வேண்டும் என்று நினைப்பேன்.. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருந்ததில்லை. சில கசப்பான அனுபவங்கள் நட்பு வட்டத்தை விரிவடைய செய்ய விடவில்லை. நெருங்கிய நட்புகள் விலகின.. (இன்றளவும் காரணம் தெரியாமலேயே) இப்போது காரணம் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. என்னுடன் பல ஆண்டுகளாக பழகியவர்கள் நான் பேசுவது பிடிக்கவில்லை என்றார்கள். மரியாதையுடன் விலகினேன். அது என் குணம்.. ஒரு சிலரின் அசவுகரியத்துக்காக பலருக்கும் பிடித்த விஷயத்தை மாற்ற விரும்பவில்லை. உறவு வட்டத்தை விட நட்பு வட்டம் எனக்கு பெரிய ஆதரவாக எப்போதும் இருந்துள்ளது. யாரும் நினைத்து பார்க்க முடியாத உதவிகளை கடினமான சூழலில் நட்புகள் எனக்காக செய்துள்ளது. வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அன்பு நண்பன் அனிஷ் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தது மனதளவில் சின்ன வலியை ஏற்படுத்தியது. சுயநலம் தான். அவன் வாழ்வில் எடுத்திருக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டும். 

அழகழகான சிறு சிறு பயணங்கள் எப்போதும் போலவே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றன. தவிர்க்க முடியாத சூழலில் திட்டமிடப்பட்ட  பயணங்களில் கலந்துகொள்ள முடியாத நிலை வந்த போது  நண்பர்கள்/தங்கைகள் பயணத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது நான் நல்ல சில நட்புகளை தான் பெற்றிருக்கிறேன்  என்பதை உறுதி படுத்தியது.  

உறவு சிக்கல் இந்த ஆண்டு கொஞ்சம் அதிகமாகவே இருந்துள்ளது. நான் மேலே சொன்னது போல , எனக்கு உறவுகளை புரிவதில் இன்னும் சிக்கல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சிலரின் தந்திரமான வலையில் சிக்கி கடினமான சூழல்களையும் அவப்பெயரையும் சந்திக்க வேண்டிஇருந்தது. காலம் என்னை புரிய வைக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். 

இத்தகை சூழலில் யாராயினும் எனக்கு ஏற்பட்ட உறவு சிக்கலில் தூண்டிவிட்டு குடும்பத்தை பிரிக்க எண்ணுவர். ஆனந்தி தான் இன்றளவும் நான் செய்த தவறையும் சுட்டிக்காட்டி நடுநிலையோடு என்னை வழிநடத்துகிறாள். காலம் அவர்களுக்கு என்னை புரிய வைக்கும். நான் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் என்பதை மிக நன்றாக அறிவேன். எதுவும் இந்த உலகில் நிரந்தரமில்லை.

நிறைய பயணப்பட வேண்டும், வாசிக்க வேண்டும், எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன்..சமூகம் சார்ந்து என்னுடைய பங்களிப்பு கடந்த ஆண்டில் சுழி ... ஆனால் வண்டி வண்டியாக பேசுவேன்... கண்டிப்பாக வரும் ஆண்டில் நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களில் தலையாயது இது. 

அனந்தியும் மஹதியும் அடிக்கடி என்னை வலியுறுத்தும் விஷயம், உடல்நலனில் அக்கறை எடுக்க வேண்டும். வரும் ஆண்டு இதை செய்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. 

Facebook இல் இருந்து விடுவித்து கொண்டதில் நிறைய நல்ல வாசிப்புகளை/தகவல்களை இழந்திருக்கிறேன். ஆயினும் அதன் negative impact அதிகமாக இருந்ததால் அதுவும் நல்லதே!

மாற்றிய விஷயம்:
அனுபவங்கள் மூலம், எல்லாரிடமும் சகட்டு மேனிக்கு உரிமை எடுத்து பேசுவதை கொஞ்சம் குறைத்திருக்கிறேன். 

நிறைய நல்ல அன்பான தங்கைகளை பெற்றிருக்கிறேன். உரிமையோடு அவர்களின் நல்லது/கெட்டதை பகிர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு உரிமையுள்ள நல்ல அண்ணனாக இருப்பதில் மகிழ்ச்சி..

வழக்கம் போல எனது குடுமபத்திற்கு இந்த ஆண்டும் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, ஆளாக வீட்டில் தான் இருந்திருக்கிறேன். அனால் பெரும்பாலான நேரங்களில் அலுவல் வேலைகளில் தான் மூழ்கி இருக்கிறேன். shrayathi யின் அன்பு புதுமையாய் இருக்கிறது. மஹதி யிடம் பெரும்பாலான விஷயங்களை அனுபவித்ததில்லை. குட்டி அப்பாவை tackle செய்யும் வித்தையை அற்புதமாக செய்கிறாள். அன்புக்கடல் அவள்.. ஆனந்தியின் பங்களிப்பு என் குடும்பத்திற்கு அளப்பரியது. தனியாக ஒரு வீட்டிற்குள் அடைந்து கிடந்தது குழந்தைகளை வளர்ப்பது, பல நேரங்களில் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. ஆனந்தி விஷயத்தில் சில நல்ல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறேன். மகிழ்ச்சி.. 

மஹதி வளர்கிறாள். மிக முக்கியமாக நான் வரும் ஆண்டில் எடுக்கப்போகும் முடிவில் ஒன்று மஹதியை இன்னும் கொஞ்சம் குழந்தையாக பாவிப்பது. அவளை திட்டுவதை குறைத்து கொள்ள வேண்டும். நல்ல நட்பை வளர்த்து கொள்ள வேண்டும். அவளுடன் தனியாக நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த உலகை பற்றிய புரிதலை மெல்ல மெல்ல ஏற்படுத்த வேண்டும். பார்ப்போம்.
Sorry for everything Ammukkutti :)

மழலை செல்வங்கள் அனைவருக்கும் இந்த அன்பு மாமா/பெரியப்பாவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வரும் ஆண்டு மிகச்சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன். என்னுடன் பயணிப்பதற்கு நன்றி!

வாழ்க வளமுடன்!

மாரிமுத்து மா
27/12/2018