Saturday, December 6, 2008

கணிப்பொறியாளனும், கமாண்டோவும்!

அந்நிய நாடு
அள்ளிக்கொடுத்தது
உன்
ஒவ்வொரு சிந்தனைக்கும்!

அறிவு கொடுத்த
அன்னை பாரதம்
குருதிக் கண்ணீர்
வடிக்கிறது!
என்ன செய்ய
இயலும்
உன்னால்??

உயிராய் வளர்த்த
என் அம்மா!
உறவுக்குப் பொருளாய்
என் தங்கை!
ஒரு நொடி
நினைவாயினும்
உயிர் இரையாகும்!
எதிரியின் தோட்டாவுக்கு!

உதிரம் உறைய
உன்னை
துப்பாக்கி ஏந்தி
துணைக்கு அழைக்கவில்லை!

இத்தனை கற்றும்
அன்பான
மனைவியை
அடித்துக்கொன்ற
உன்னால்,
எனக்கு
சப்பாத்தி
சுடக்கூட
தெரியாது
எனத் தெரியும்!

இரவு பகல்
பாராது
எந்திரமாய்
எல்லையில்
நான் நிற்க!

பகலை இரவாக்கி
பாவை நடனம்
உனக்கு!!

லட்சியமாய்
வாழும்
பெரியவரிடம்
உனக்கு அலட்சியம்!

பாழாய் போன
பாரதம், உன்னால்
பத்து பைசா
பலனில்லை எனினும்
பரணில்
வைத்துப் பார்ப்பதை
தான் பொறுக்க முடியவில்லை!

எனக்கு
கால் மேல் கால்
போட்டு
கணிப்பொறி
இயக்கத் தெரியாது!

அம்பு தெறித்த
வில்லாய்
அண்டி வந்த
அநீதியை
நெஞ்சு கீறி
கொல்ல இயலும்!

உனக்கிருப்பது
போலத் தான்
எனக்கும்!
உயிரும்,உறவும்!

தடுக்கி விழும்
தளர்ந்தவர்களையாவது
தூக்கி விடு!
எதிர்த்து வரும்
எதிரிகளை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்!

சமர்ப்பணம்: என் தாய் நாட்டுக்காக உதிரம் சிந்திய சகோதரர்களுக்கு
நான் சிந்தும் ஒரு சொட்டு 'மை' சமர்ப்பணம்..

அன்புடன்
மாரிமுத்து..

Sunday, October 5, 2008

ஊதாரியின் தாய்!

அதிகாலைப் பொழுது முதல்
அந்திசாயும் மாலை வரை
ஒவ்வொரு நொடியும்
உன்னடி பிடித்திடுவாள்!
உதறியபடி நீ
ஊதாரியாய் திரிந்திடுவாய்..

தன்வயிறு
காயினும்,
உன்வயிறு
நிறைத்திடுவாள்!

குற்றவாளி நீ
எனினும்,
உன் முகம்
காட்ட மாட்டாள்!

தலைவலி
கொடுப்பினும்,
இலையிட்டு
உணவளிப்பாள்!

கொலைப்பழி
விழினும்,
வழிசென்று
அழைத்திடுவாள்!

நீ குருதி காண்கிறாய்
ஒரு கொலையில்!
அவள்
உனக்குப் போய்
குருதியையே
உணவாக்கியவள்!

ஆம்!
தாய்மையில்
வேற்றுமையில்லை,
வேற்றுமை......
உன்னிலும் என்னிலும் தான்!!

Saturday, October 4, 2008

சிவப்பு விளக்குப் பகுதி!


அபலைப்

பெண்களின்
அரண்மனை!
விடலைப்
பையன்களின்
விபத்துப் பகுதி!

மழை!



வானம்
பொய்த்து விட்ட
கவலையில்
உழவன் வயலில்!
பெய்தது
மழையாய்
வியர்வைத் துளிகள்...

Saturday, September 27, 2008

ஒரு மாற்றத்திற்காக...

கவிதைகளால் பிழிந்து எடுக்கப்பட்ட
பிஞ்சு இதயங்களுக்கு ஒரு மாறுபட்ட
நகைச்சுவை..
***************************************

விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும்
அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - நகைச்சுவை புயல் திரு.வடிவேலு

(இவர் ஒரு தலை சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதற்கு இதைவிட
சிறந்த உதாரணம் இருப்பதாக தெரியவில்லை.)

விஜயகாந்த் அவரது தகுதிக்கு வடிவேலு வுடன் எல்லாம் போட்டி
போடக்கூடாது, என்னை போன்ற பெரிய அரசியல்வாதியுடன் தான்
மோத வேண்டும். - பிரபல அரசில்வாதி(?) T.ராஜேந்தர் அவர்கள்.

நம்ம தலையெழுத்து....இதையெல்லாம் கேக்கணும்ணு...!!!

இவங்க உண்மையிலேயே நடிகர்கள் தான் நான் ஒத்துக்கிறேன்...

அப்போ நீங்க??

நன்றி :
திரு.வடிவேலு, திரு. T.ராஜேந்தர், தேவா அண்ணா , திலக் அண்ணா, ரெங்கராஜ் அண்ணா..

அன்புடன்,
மாரிமுத்து..

Friday, September 26, 2008

உன்னிலும் என்னிலும் !
















உலகம்

உயிர்கள் தோன்றிய விதம் பற்றி
ஆய்வு நடத்தி கொண்டிருக்கையில்
என் பார்வையில் உலகம்...
கருவறை மாறியதால் மாறியது பல...
உன்னிலும் என்னிலும்..!

கைப்பிடித்து நீ நடை பழகையில்
நானும் நடை பழகினேன் !
கையேந்தி,
கடைத்தெருவில் !

நீ புசித்து போட்ட எச்சைக்கும்
கூட எனக்கு போட்டியாளன்
என் வயது நண்பன்-
தெரு நாய்!

நீ தாய்ப்பால் பருகையில்,
தண்ணீருக்கே வழியில்லாத
அவளிடம்,
எஞ்சிய
இரத்தமும் எனக்காய்
தாய்ப்பாலானது!

பிரவசத்தில் மட்டும்
நான் உன்னை விஞ்சினேன் !
ஆம்!
நான் சுகப்(?)பிரவசமாம் !
நீ சிசெரியனாம்!

***நாய் பூனைக்குப் பாலூட்டியதாம் !
***ஐந்து ரூபாய் தகராறில் அண்ணன்
அடித்துக் கொலை - செய்திகள் .
இதில் யாருக்கு ஐந்தறிவு ?
யாருக்கு ஆறறிவு ?
புரியவில்லை எனக்கு!

நாளைக்கு மூணுவேளை சாப்பிடணும்,
வரைமுறை உனக்கு !
நாளைக்காவது சாப்பிடவேண்டும்
என்று நான்!

எனக்கொன்றும் நான்
நீயாக வேண்டும்
என்றில்லை !
குறைந்தபட்சம் இத்தகைய
செய்திகளை கேள்விப்படாமல்
இருந்தாலே போதும்!

உலகப் பணக்காரனுக்கே
நாளைய நிலை எண்ணி
தினம் தினம் கலக்கம்!
உள்ளத்தால் பணக்காரனாய்
உணர்கிறேன் நான்!

கந்தையானாலும்
கசக்கிக்கட்டு !
கந்தையே இல்லையெனில் ?

கால் வயிற்று கஞ்சிக்கு
கால் தொட்டு தொழுகிறேன் !
கண நேரத்தில் உடல் முழுதும்
சேற்றை இறைத்தாய் உன் காரில்!

`அனைவருக்கும் கட்டாய கல்வி '
என்பதெல்லாம் அரசியல்
எந்த பள்ளியில் அனுமதிக்கிறார்கள்
என் போன்றவனை?

அத்தனையும் அதிகமாய்
கிடைக்கபெற்ற உங்களுக்குள்ளே இவ்வளவு
போட்டியும் பொறாமையும் !
எதுவுமே இல்லாமல் படைக்கப்பட்ட
என்னையும் உன்னுடன் கலந்தது
எந்த விதத்தில் நியாயம் ?

விடை தெரியாத வினாக்களாகவே
அமைந்தன அத்தனையும்!

நீ
கேட்பது சரிதான்!
சமுதாயத்தில்
காலங்காலமாய் புறக்கணிக்கப்பட்ட
எனக்கு இத்தனை கேள்விகள்
எழக்கூடாது !
எத்தனை என் போன்றவனை
பரிவு காட்டியது இந்த சமுதாயம் ?
என் மனம் நீ அறிந்து கொள்ள ....

எதுவாயினும்
பிறப்பிடம் தவிர்த்து
பிறப்பால் நானும் உன்னில் ஒருவன் தானே ?

அன்புடன்....
மாரிமுத்து.
9790123346

நன்றி!!!